திங்கள், 8 பிப்ரவரி, 2010

விண்டோஸ் வேகமாக

விண்டோஸ் – என்னதான் வேகமாக இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இருந்தாலும், சில வேலைகளை மேற்கொள்கையில் தொடர்ந்து எந்த மாற்றமும் இன்றி அதே பாணியில் தான் இயங்கும். எடுத்துக் காட்டாக வெல்கம் ஸ்கிரீன், ஸ்டார்ட் அப் புரோகிராம்களைக் கொண்டு வருதல், சிஸ்டம் ஷட் டவுண் செய்தல் ஆகியவற்றைக் கூறலாம். இந்த வேலைகளில் சிஸ்டம் பைல்களைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து வேகம் தரும் சில புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இவை பெரும்பாலும் இலவசம் தான். இந்த புரோகிராம்கள் குறித்த தகவல்கள் இங்கே தரப்படுகின்றன.


1. ஸ்டார்ட் அப் டிலேயர் (Startup Delayer): அடிக்கடி புரோகிராம்களை இன்ஸ்டால் செய்கையில், பல வேளைகளில் என்ன செய்கிறோம் என்று அறியாமல், அவற்றை ஸ்டார்ட் அப் லிஸ்ட்டில் வைத்து விடுகிறோம். இதனால் ஸ்டார்ட் அப் புரோகிராம் எண்ணிக்கை அதிகமாகிறது. விண்டோஸ் இயக்கம் நிலைக்கு வர நேரமாகிறது. ஸ்டார்ட் அப் டிலேயர் என்னும் இந்த புரோகிராம், ஸ்டார்ட் அப் லிஸ்ட்டில் உள்ள புரோகிராம்களை, ""நீங்கள் எல்லாம் கொஞ்சம் பொறுமையா இருங்க, அப்புறமா வாங்க'' என்று சொல்லி விண்டோஸ் இயக்கத்தினை அமல்படுத்து கிறது. இதனால் உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கி மேலும் பணிகளை எடுத்துக் கொள்ள தயாராகிறது. இந்த நிலை வந்த பின்னர், ஸ்டார்ட் அப் புரோகிராம்கள் ஏற்றப்படும்.

ஸ்டார்ட் அப் டிலேயரை இன்ஸ்டால் செய்து இயக்கியவுடன், உங்கள் சிஸ்டத்தில் உள்ள அனைத்து ஸ்டார்ட் அப் புரோகிராம்கள் அனைத்தையும் இது பட்டியலிட்டுக் காட்டுகிறது. இவற்றில் எதனை எல்லாம் தாமதமாகக் கொண்டு வரலாம் என்று கருதுகிறீர்களோ, அவற்றை இழுத்து வந்து கீழாக உள்ள வெள்ளை பாரில் விட்டுவிட வேண்டும். குறிப்பிட்ட அப்ளிகேஷனைக் காட்டும் கோடு ஒன்று அங்கு காணப்படும். தாமதம் அதிகமாக இருக்க வேண்டுமா அல்லது குறைவாக இருக்க வேண்டுமா என முடிவு செய்து, அதற்கேற்ப அந்த கோட்டை இழுத்துவிடலாம்.

இந்த இலவச புரோகிராமினை  http://www.pcworld.com/article/151952/boot_   faster_with_startup_delayer.html என்ற முகவரி யில் உள்ள தளத்திலிருந்து பெறலாம். இது விண்டோஸ் 7 தொகுப்பிலும் இயங்கும்.

2. குரோம் (Chrome) மாறலாமா?: உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் மிக அதிகம் பயன்படுத்தப் படும் புரோகிராம் எது? தயக்கமின்றி இன்டர்நெட் பிரவுசர் என்று சொல்லலாம். வேகமாக இன்டர்நெட் பிரவுசிங் செய்திட வேண்டு மென்றால், அடிப்படையில் வேகமான இன்டர்நெட் இணைப்பு வேண்டும். அதன் பின் வேகமாக இயங்கும் பிரவுசர் வேண்டும். வேகம் மட்டுமே உங்கள் இலக்காக இருக்கும் பட்சத்தில், நீங்கள் குரோம் பிரவுசரை இன்ஸ்டால் செய்து இயக்கலாம். வேகத்தைப் பொறுத்தவரை, குரோம், பயர்பாக்ஸ் 3.5, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8, ஆப்பரா 10, சபாரி என வரிசையில் இடம் பெறுகின்றன.

3. பவர் செட்டிங்ஸ் (Power Settings): பெர்சனல் கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை, அதன் இயக்க தன்மையை மெதுவாக்கி, அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைத்து மின்சாரத்தை மிச்சப்படுத்தப் போவதில்லை. ஏனென்றால் அது பேட்டரியில் இயங்கவில்லை. எனவே கம்ப்யூட்டர் மேற்கொள்ளும் ஒவ்வொரு வேலையையும் அதிக பட்ச திறன் கொண்டு இயங்கும் வகையில் அமைப்பது நல்லது. இதற்கென விண்டோஸ் 7 மற்றும் விஸ்டா டிபால்ட்டாக ஒரு பேலன்ஸ்டு
(‘Balanced’)
பெர்பார்மன்ஸ் என்ற நிலையைக் கொண்டுள்ளன. இதனை இன்னும் கொஞ்சம் ஊக்குவிக்க ஒரு சிறிய வேலையைச் செய்யலாம். ஸ்டார்ட் கிளிக் செய்து கிடைக்கும் ரன் கட்டத்தில் பவர் (Power) என டைப் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் Power Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Higher Performance என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது அங்கே உள்ள பட்டியலில் இல்லை என்றால் Show Additional Plans என்பதைக் கிளிக் செய்திடவும். இதிலும் ஒவ்வொரு பகுதியாக, எடுத்துக்காட்டாக, ஹார்ட் டிரைவ் ஷட் டவுண் செய்திடும் முன் எவ்வளவு நேரம் சுழலாமல், வேலை செய்யாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற செட்டிங்ஸ் அமைக்க வேண்டும் என்றால் Change plan settings, Change advanced power settings என்பனவற்றைக் கிளிக் செய்திடவும்.

4. புரோகிராம் நீக்கம்: பெர்சனல் கம்ப்யூட்டர்களை வாங்குகையில், அதனைத் தயாரிக்கும் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர் களுக்குப் பயனளிக்கும் என்று எண்ணுகின்ற பல புரோகிராம்களை பதிந்து அனுப்புகின்றனர். இவை ஹார்ட் டிரைவ் இடத்தை அடைத்துக் கொண்டு இருக்கும். சில ஸ்டார்ட் அப் லிஸ்ட்டில் இருந்து கொண்டு ராம் மெமரியைக் காலி செய்திடும். எனவே இவற்றை நீக்கலாம். இதற்கு கண்ட்ரோல் பேனல் சென்று ஆட்/ரிமூவ் பிரிவைப் பயன்படுத்தி நீக்கலாம். அல்லது ஏற்கனவே இந்த பகுதியில் எழுதப்பட்ட Revo Uninstaller போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்தலாம். இது போன்ற புரோகிராம்கள், தேவையற்ற புரோகிராம்களை நீக்குவதுடன், ஏற்கனவே நீக்கப்பட்ட புரோகிராம்கள் தொடர்பான சிறிய பைல்களையும் அறவே காலி செய்திடும்.

5. வெப் ஆப் ட்ரஸ்ட் (Web of Trust):இந்த புரோகிராம் விண்டோஸ் தொகுப்பினை ட்யூன் செய்யாது என்றாலும், அதனைப் பாதுகாக்கும் வேலையைச் செய்கிறது. பலமுறை இன்டர்நெட் தளங்கள் மற்றும் மின்னஞ்சல்களில் உள்ள லிங்க்குகளில் கிளிக் செய்து, வைரஸ் மற்றும் மால்வேர்களிடம் நம் கம்ப்யூட்டர்கள் மாட்டிக் கொள்கின்றன. எப்படி லிங்க் ஒன்று மோசமாக நம்மை மாட்டிவிடும் மால்வேர் புரோகிராம்களைக் கொண்டுள்ளது என்று தெரிந்து கொள்வது? அதற்கான வழிதான் வெப் ஆப் ட்ரஸ்ட் என்னும் புரோகிராம். இது இலவசமாகக் கிடைக்கிறது. இது ஒரு ஆட் ஆன் தொகுப்பாக இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கும் பயர்பாக்ஸுக்கும் கிடைக்கிறது. இதனை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்துவிட்டால், இது ஒவ்வொரு லிங்க்கிற்கும் பச்சை (பாதுகாப்பானது), மஞ்சள் (ஆபத்து இருக்கலாம்) மற்றும் சிகப்பு (உறுதியாக ஆபத்தானது) என்றபடி வண்ண ஐகான்களை வழங்கும். அல்லது லிங்க்கின் மீது ரைட் கிளிக் செய்து, அங்கு கிடைக்கும் மெனுவில் View WOT scorecard என்பதைத் தேர்ந்தெடுத்து நாமாக சோதித்துக் கொள்ளலாம்.

ஒரு கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எப்போது நமக்கு எளிதானதாகவும், உற்ற தோழனாகவும் தெரியும்? அது நாம் எதிர்பார்க்கும் வேலையை, குறித்த காலத்தில் செய்து கொடுக்கும் போது, இல்லையா! இதற்கு உங்கள் விண்டோஸ் தொகுப்பைச் சற்று ட்யூன் செய்திடலாம்.

1.குளோஸ் ஆல் விண்டோஸ் (Close All Windows): கம்ப்யூட்டரில் அன்றைக்கான வேலையை முடித்துவிட்டீர்கள். ஷட் டவுண் செய்திடும் முன் திரையில் அதிக எண்ணிக்கையில் புரோகிராம்கள் திறந்து இருப்பது தெரிகிறது. ஒவ்வொன்றாக மூட வேண்டும்; சற்று எரிச்சல் தான். இதற்காகவே குளோஸ் ஆல் விண்டோஸ் என்ற புரோகிராம் கிடைக்கிறது. இதனை பதிந்து டாஸ்க் பாரில் போட்டு வைத்திடுங்கள். பின் இதனைக் கிளிக் செய்தால், அனைத்து புரோகிராம்களும் ஒரு பிளாஷ் மாதிரி மூடப்படும். ஏதேனும் ஒரு புரோகிராமில் பைல் சேவ் செய்யப்பட வேண்டி இருந்தால், உங்களைக் கேட்டு டயலாக் பாக்ஸ் தரப்பட்டு வழக்கம்போல சேவ் அழுத்த வேண்டியதிருக்கும்.

2. டாஸ்க் பார் ஓரத்தில்: இப்போதெல்லாம் அகலமான எல்.சி.டி. திரை கொண்ட மானிட்டரை அதிகம் பேர் பயன்படுத்துகின்றனர். இதில் இடது வலது ஓரங்களில் சிறிது இடம் விட்டு மற்ற இடங்களில் விண்டோக்கள் கிடைக்கின்றன. ஏன், இதனையும் பயன்படுத்தலாமே. முழுவதுமாக விண்டோ காணப்பட்டாலும், நமக்கு புரோகிராம்களில் மேல் கீழாகத்தானே இடம் தேவைப்படும். எனவே கீழே உள்ள டாஸ்க் பாரை, ஓரத்திற்குக் கொண்டு செல்லலாமே. முதலில் கீழேயே வைத்துப் பார்த்துப் பயன்படுத்திய கண்களுக்கு சற்று வித்தியாசமாகத்தான் தெரியும். பழகிவிட்டால் சரியாகிவிடும். நமக்கு புரோகிராம்களில் வேலை செய்திட அதிக இடம் கிடைக்கும்.

இதற்கு டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Lock the taskbar என்று இருப்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். அடுத்து, டாஸ்க் பாரில் உள்ள காலி இடத்தில் இடது கிளிக் செய்து அப்படியே இழுத்து இடது அல்லது வலது பக்கம் கொண்டு விட்டுவிடவும். ஓரத்திற்கு சென்றவுடன் டாஸ்க் பார் இறுத்திக் கொண்டு விடும். பின் மவுஸை அழுத்தி இருப்பதை எடுத்துவிடவும்.

கருத்துகள் இல்லை: